பொள்ளாச்சி அடுத்த ஆளியார் மங்கரை பீட் வனப்பகுதி அருகே சிலர் முள்ளம் பன்றி மற்றும் காட்டு முயல்களை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையில் வனவர் பிரபாகரன் மற்றும் அவருடன் வேட்டைத் தடுப்பு காவலர்கள் இதனைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கலக்குறிச்சி வனத்துறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மணிகண்டன், தியாகராஜ், காமாட்சி சுந்தரம், செல்வகுமார் மற்றும் பொங்கலூர் சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிச்சாமி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கிலோ காட்டு முயல் இறைச்சி மற்றும் 5 கிலோ முள்ளம் பன்றி இறைச்சி மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் வேட்டைக்குப் பயன்படுத்திய வலை, டார்ச்லைட், கன்னி ஆகியவற்றையும் கைப்பற்றினர். வனத்தில் உள்ள விலங்குகளை காப்பாற்றுவது மனிதர்களின் முக்கியக் கடமை. மனிதர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரக அலுவலர் காசிலிங்கம் எச்சரித்தார்.
0 Comments